ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்): பெண் மருத்துவர் ஒருவர், ஐபிஎஸ் அதிகாரியை போலி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைக்க போவதாக மிரட்டி அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஐபிஎஸ் அதிகாரி, கடந்த ஆக.18 ஆம் தேதி ஜவஹர் வட்ட காவல் நிலையத்தில் அந்தப் பெண் மீது புகார் அளித்தார்.
இதுகுறித்து ஜவஹர் காவல் நிலைய அதிகாரி அரவிந்த் குமார் சரண் கூறுகையில், மருத்துவராக பணியாற்றி வரும் பிரியங்கா என்ற பெண் மீது ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் குமார் மீனா புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு, தான் ராஜஸ்தான் நிர்வாக சேவையில் (Rajasthan Administrative Service-RAS) ப்ரோபேஷனரி அதிகாரியாக பணியாற்றிக்கொண்டு இருந்த போது, பிரியங்கா என்ற பெண் தானும் RAS-க்கு தயாராகி வருவதாகவும், இதனால் தனக்கு உதவ வேண்டும் எனக் கூறி அறிமுகமாகியுள்ளார்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் ஒருமுறை அந்தப் பெண்ணிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி, பின்னர் திருப்பிக் கொடுத்ததையும் ராஜேஷ் புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2021-ல், ராஜேஷ் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்குக் கடந்த மே 2023-ல் திருமணம் நடந்துள்ளது. இதன் பிறகு, அந்தப் பெண்ணுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தியதாக ராஜேஷ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.