ராஜஸ்தான் (சித்தோர்கர்): ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில், பட்டியலின முதியவர் தலையில் காலணியை வைத்து மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கர் மாவட்டத்தில், கிராம பஞ்சாயத்தில் பட்டியலின முதியவர் ஒருவர் தலையில் காலணிகளை வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இச்சம்பவம், குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, உள்ளூர் பட்டியலின அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம், செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட முதியவர் தால்சந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மாலை கிராம பஞ்சாயத்துக்கு பட்டியலின முதியவர் தால்சந்த் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதன் பேரில், கிராம பஞ்சாயத்துக்கு சென்ற போது அங்கு இருந்த மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு எதிராக கருத்து தெரிவித்தாக மிரட்டி தலையில் காலணிகளை வைத்து மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.