ஜெய்ப்பூர்: இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்த நாள் முதல் தேர்தல் பரப்புரைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.
இதன் ஒருபகுதியாக, மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அக்.25-ல் தேர்தல் பேரணி மேற்கொண்டு தீவிரமாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உடன் இணைந்து பரப்புரை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து ஜுன்ஜுனு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் முதலமைச்சர் அசோக் கெலாட் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
'ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் ஆண்டுக்கு மூன்று தவணையாக ரூ.10,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதேபோல, 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்' என அறிவித்திருந்தார்.