ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மாநிலத்தின் நிதியமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.10), ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வாசிக்கப்பட்டது. அப்போது நிதியமைச்சராக உள்ள முதலமைச்சர் அசோக் கெலாட், காலை 11 மணியளவில் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.
சுமார் 8 நிமிடங்களுக்குப் பிறகு, அசோக் கெலாட்டின் அருகில் அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், முதலமைச்சருடன் அமைதியாக பேசினார். இதனையடுத்துதான், முதலமைச்சர் அசோக் கெலாட் வாசித்த பட்ஜெட், கடந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் என தெரிய வந்துள்ளது. இதனால் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
அப்போது சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் குலாப் சந்த் கடாரியா, பட்ஜெட்டை வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்குமாறு சபாநாயகர் சிபி ஜோஷியிடம் முறையிட்டார். ஆனால், இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மீண்டும் அவையில் அமளி ஏற்பட்டது. எனவே அவை அரை மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.