ஜோத்பூர் (ராஜஸ்தான்):
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 25ஆம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ராஜஸ்தான் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள சர்தார்புரா சட்டமன்றத் தொகுதி காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படுகிறது, 1998 ஆம் ஆண்டு முதல் இங்கு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அசோக் கெலாட் அபார வெற்றி பெற்றுள்ளார்.
அதிலும் குறிப்பாகக் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், சர்தார்புரா தொகுதியில் அசோக் கெலாட் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேந்திர கெலாட்டை 15,340 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதேபோல், 2018 சட்டமன்றத் தேர்தலில் அசோக் கெலாட் 63 சதவீத வாக்குகளைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள சர்தார்புரா சட்டமன்றத் தொகுதியில் ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான அசோக் கெலாட் இன்று (நவ. 6) வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
மேலும், முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மனைவி சுனிதா கெலாட் மற்றும் மகன் வைபவ் கெலாட் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அவருடன் சென்றதாகவும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, தனது சகோதரியிடம் முதலமைச்சர் ஆசி பெற்றதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, ஜோத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உமைத் சிங் மைதானத்தில் இன்று (நவ. 6) பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:சாதிவாரி கணக்கெடுப்பு, விவசாய கடன் தள்ளுபடி என சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதிகள் விவரம்!