டெல்லி : ராஜஸ்தான் காங்கிரசுக்குள் நிலவும் உட்கட்சி பூசலைத் தீர்க்கும் விதமாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் சந்தித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதலே அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு சச்சின் பைலட் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் பல்வேறு கேள்விகளை எழுப்பி தொடர்ந்து தலைவலி கொடுத்து வருகிறார்.
கடந்த பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்கள் தொடர்பாக அசோக் கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி வரும் சச்சின் பைலட், இந்த ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். மேலும் பாஜக முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக அசோக் கெலாட் செயல்படுவதாக, சச்சின் பைலட் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், விரைவில் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் முறையில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்னதாக அசோக் கெலாட் டெல்லியில் உள்ள மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் வைத்து அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். மூன்று பேரும் சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவாவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.