ராஜஸ்தான் மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர் பன்வர் லால் மேக்வால். இவர் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஆறு மாதங்களுக்கு மேலாக சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி நேற்று மருத்துவமனையிலேயே இயற்கை எய்தினார். இவரது இறுதிச்சடங்கு இன்று (நவ.17) ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் பன்வர் லால் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அரசு அலுவலக ரீதியான எவ்வித நிகழ்வுகளும் நடைபெறாது. அமைச்சர் பன்வர் லாலின் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
அமைச்சர் மாஸ்டர் பன்வர்லால் மேக்வாலின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,”ராஜஸ்தான் அமைச்சர் மாஸ்டர் பன்வர்லால் மேக்வாலின் மறைவு வேதனையளிக்கிறது. அவர், ராஜஸ்தானுக்கு சேவையாற்றுவதில் துடிப்புடன் விளங்கிய மூத்த தலைவர். இந்தக் துயரமான வேளையில் அவரது குடும்பத்துக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து கொள்கிறேன்”எனக் கூறியுள்ளார்.