ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலத்தில் 200 சட்டமன்றத் தொகுதிகளில் 199 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.25) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில், கரன்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனூர் உயிரிழந்த நிலையில், அந்த தொகுதியில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, காலை 9 மணி நிலவரப்படி 9.77 சதவீத வாக்குகள் பதிவாகியது. 11.30 மணி நிலவரப்படி 24.74 சதவீத வாக்குகள் பதிவாகியது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.27 சதவீத வாக்குகளும், 3 மணி நிலவரப்படி 55 புள்ளி 63 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல ஆணையம் தெரிவித்து உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாக்களித்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் கூறும் போது, "1952 முதல் தற்போது வரை ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. இவ்வளவு பெரிய அளவில் நியாயமான தேர்தல் நடத்திய இந்தியத் தேர்தல் ஆணையத்தை வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் டிஜிபி உமேஷ் மிஸ்ரா கூறும் போது, "ராஜஸ்தான் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும். தேர்தலுக்காகப் பலத்த பாதுகாப்பு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் உள்ளனர்." என தெரிவித்தார்.