பரத்பூர் (ராஜஸ்தான்):இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் போர் விமானம், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜைன் நகர் அருகே இன்று (ஜனவரி 28) விபத்துக்குள்ளானது. இதனை பரத்பூர் மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் உறுதி செய்தார். இந்த விபத்து குறித்து அறிந்த உள்ளூர் காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் விமானப்படை அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த விமானம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் விமானி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை மக்கள் தொடர்பு அலுவலர் கலோனல் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து நடந்த பகுதியில் உடல்கள் ஏதும் இருக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விமானி உயிர் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காலை 10.30 மணியளவில் விமானம் தரையில் விழுந்த சத்தம் கேட்டதாகவும், பின்னர் விபத்துக்குள்ளான விமானத்தில் ஏற்பட்ட தீயை மணல் கொண்டு அணைக்க முயற்சி செய்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். அப்போது சிலர் எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.