புபனேஸ்வர்:ஒடிசா மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக புனிதமானது, 'ராஜ பர்பா' விழா. இது மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. பெண்மையைப்போற்றும் இந்தப் பண்டிகை, இன்று (ஜுன் 14) முதல் மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
பெண்களைப் போற்றும் ராஜபர்பா விழா
ராஜபர்பா விழாவின், இந்த மூன்று நாட்களில் இந்து கடவுள் விஷ்ணுவின் மனைவியான பூமித்தாய், 'மாதவிடாய்' என்னும் களைப்புக்குட்படுவதாகவும், வரக்கூடிய பருவமழைக்கு ஏற்ப இந்த குறிப்பிட்ட நாளுக்குள் தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதாகவும் மக்கள் நம்புகின்றனர்.
இந்த மூன்று நாட்களுக்குப் பின், வரும் நான்காவது நாளை வசுமதி கவுதா அல்லது பூதேவி குளியல் என அழைக்கின்றனர். இவ்விழாவில் உபயோகப்படுத்தப்படும், ராஜா என்னும் வார்த்தையானது மாதவிடாய்க்கு உட்பட்ட பெண் என்று பொருள்
சேலைகளில் வலம் வரும் பெண்கள்
இந்த மூன்று நாட்களில், பெண்களுக்கு வீட்டு வேலைகளில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டு, வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுகளை விளையாட நேரம் வழங்கப்படுகிறது.
இந்த நாட்களில் பெண்கள் பாரம்பரிய சேலை அணிந்து, காலில் 'அலதா' எனப்படும் மருதாணியைப் பூசி அலங்கரிக்கின்றனர். குறிப்பாக, எல்லா மக்களும் பூமியில் வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கிறார்கள்.
பிதா என்னும் கேக்குகளை உண்ணும் வழக்கம்:
இத்திருவிழாவின் ஒரு அங்கமாக பல்வேறு வகையான 'பிதா' எனப்படும் கேக்குகளை மக்கள் உண்பர். ஆகையால், இந்த கரோனா காலத்தில் மக்கள் ராஜ பர்பா பண்டிகையைக் கொண்டாட, ஒடிசா சுற்றுலாத்துறையின் சார்பாக, கேக்குகளையும் வீடு வீடாக சென்று விநியோகிக்க அரசு திட்டம் தீட்டியுள்ளது.
குறிப்பாக, போடா, மண்டா, ககரா, அரிசா, சாகுழி, சந்திரகலா ஆகிய விதவிதமான கேக்குகள் தயார் செய்யப்பட்டு முக்கிய நகரங்ளில் இவை விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்காக உருவாக்கப்பட்ட நடமாடும் கடைகள் மூலம் புபனேஸ்வர், கட்டாக், சம்பல்பூர் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனை வரும் 16ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.