ஐதராபாத் : ஒடிசா மாநிலம் பாலசோரில் நடப்பு நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து எனக் கூறப்படும் கோரமண்டல் உள்ளிட்ட மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம், நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் சிக்கி 280க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 900க்கும் அதிகமான மக்கள் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படாதது பெரும் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து மனித தவறால் ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்ற பெருத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான சென்னை கோரமண்டல் விரைவு ரயிலில், ஆயிரத்து 257 முன்பதிவு செய்த பயணிகளும், யஷ்வந்த்பூர் விரைவு ரயிலில் ஆயிரத்து 39 முன்பதிவு பயணிகளும் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில், சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது நிர்வாக கோளாறு காரணமாக நிகழ்ந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது.
முதலில் ரயில் விபத்து எப்படி நேர்ந்தது என்பது குறித்த பல்வேறு கதைகள் உலாவி வருகின்றன. பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில் தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்ததாகவும், அந்த தண்டவாளத்தில் வந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில், தடம் புரண்டு கிடந்த ஹவுரா ரயில் பெட்டிகள் மீது மோதி, அருகில் உள்ள தண்டவாளத்தில் இருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம், இந்த விபத்து குறித்து பேசிய ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, கோரமண்டல் ரயில், நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாகவும் அந்த பெட்டிகள் மீது பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில் மோதியதாகவும் கூறினார். இது விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.
அதேநேரம், விபத்து குறித்து பேசிய ரயில்வே அதிகாரி, சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு இருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் விரைவு ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது எப்படி என்று சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தகவல் பரிமாறுவதில் தவறு ஏற்பட்டதா அல்லது மனித தவறா என்றும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க :கவாச் கருவி என்றால் என்ன? ரயில்கள் விபத்தை அது எப்படி தடுக்கும்?