ஒடிஷா:ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே கடந்த 2ஆம் தேதி, கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரிலிருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரண்டு பயணிகள் ரயில்களின் பெட்டிகள் தூக்கி எறியப்பட்டன. ரயில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி நசுக்கப்பட்டன. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள், ஹவுரா ரயிலின் 2 பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கி இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,000 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று(ஜூன் 3) சம்பவம் நடந்த பாலசோரில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு, விபத்து நடந்த ரயில் பாதையில் ரயில் மோதலை தடுக்கும் கவாச் அமைப்பு ஏன் இல்லை? என்றும் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார். கவாச் அமைப்பு இருந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்றும் கூறினார்.
அதேபோல், இந்த ரயில் விபத்துக்கு கவாச் தொழில்நுட்பம் இல்லாததே காரணம் என பல்வேறு தரப்பினரும் கூறியிருந்தனர். மேலும், இந்த ரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சீரமைப்புப் பணிகளை இன்று(ஜூன் 4) காலையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "இந்த ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்(electronic interlocking) என்ற சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறே காரணம். இந்த விபத்துக்கும் கவாச் அமைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது முற்றிலும் வேறுபட்ட பிரச்சினை. எலக்ட்ரானிக் இன்டர்லாக் செய்யும் போது ஏற்பட்ட சிக்னல் மாற்றம் காரணமாகவே விபத்து நடந்தது. இதற்கு யார் காரணம்? எப்படி நடந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போதைக்கு சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். வரும் 7ஆம் தேதி காலைக்குள் சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்பதே இலக்கு" என்று கூறினார்.
இதையும் படிங்க: மக்கள் பாதுகாப்பை கவனிக்கவில்லை; விளம்பரத்திற்கு முக்கியத்துவம்: மத்திய அரசை விளாசும் ஆம் ஆத்மியின் பதக்!