பாலசோர்: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதி நேற்று (ஜூன் 2) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது, மாநில மீட்புக் குழு, தேசிய பேரிடர் குழு மற்றும் உள்ளூர் மக்கள் பலரின் உதவியோடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், படுகாயம் அடைந்த 650க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள கோபால்பூர், காந்தபுரா, பாலசோர், பத்ராக் மற்றும் சோரோ போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று (ஜூன் 3) காலை விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “இந்த கோர ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதுதான் எங்களது முதன்மை இலக்காக உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த தரவுகளைக் கொண்ட உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்.