பாலசோர் :ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் மீது மோதியதில் கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டு விழுந்த நிலையில் அதன் மீது மோதி யஷ்வந்த்பூர் விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து எற்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
விரைவில் விபத்துக்கான முழு காரணம் கண்டறியப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மூன்று ரயில்கள் விபத்தில் சிபிஐ விசாராணை நடத்த வேண்டும் எனக் கோரினார்.
விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் ஜூன் 7ஆம் தேதிக்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. விபத்து பகுதியில் வயரிங் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.