டெல்லி:மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுடன் ஈடுபட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், வேளாண் கூட்டமைப்புகளில் ஒன்றான சம்யுக்தா கிசான் மோர்ச்சா நாடு தழுவிய நான்கு மணி நேர ரயில் முற்றுகை போராட்டத்தை நடத்தியது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்த முற்றுகை போராட்டம் அமைதியான முறையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில்கள் நிறுத்தப்பட்டதால், ரயில் சேவைகளில் மிகக் குறைந்த அளவேனும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கும்.
விவசாயிகள் இயக்கம் குறித்த மத்திய அரசின் அணுகுமுறையை இந்திய குடிமக்கள் பெரும்பாலும் எதிர்த்துள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியிலும் கோபத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய அரசு விரைந்து சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் இயக்கம் வெற்றிபெறும். மோடி அரசாங்கத்தின் நோக்கங்கள் முறியடிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக, இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் விவசாய சங்கத்தின் ரயில் மறியல் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த போராட்டத்தால் ரயில் சேவைகள் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டன. இதனால் பெரும்பாலான மண்டல ரயில்வே நிலையங்களில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. சில பகுதிகளில் ஒரு சில ரயில்கள் நிறுத்தப்பட்டன, ஆனால் இப்போது ரயில் நடவடிக்கை இயல்பாகியுள்ளது என்றார்.