ராய்காட்: மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்ஷால்வாடி மலை கிராமத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில், இதுவரை 16 பேரின் உடல்களை தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மீட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி பல வீடுகள் புதையுண்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
கலப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட மலைச் சரிவு பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் மீட்புப் பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படை மீண்டும் தொடங்கி உள்ளது. நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்து உள்ள கிராமத்தில், 228 பேர் வசிப்பதாக தகவல் வெளிவந்து உள்ள நிலையில், 16 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டு உள்ளன.
இருப்பினும், மொத்தம் 119 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர்களில் திருமணத்திற்கு அல்லது நெல் தோட்ட வேலைக்காக கிராமத்தை விட்டு வெளியே சென்றவர்களும் அடங்குவர். இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், அங்கு உள்ள கிட்டத்தட்ட 50 வீடுகளில் 17 வீடுகள் முற்றிலுமாக தரையில் புதையுண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், குறைந்தபட்சம் நான்கு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள், மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளன. குறிப்பாக, தானே பேரிடர் மீட்புப் படை (TDRF), உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் ராய்காட் காவல் துறையினரும் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.