பாட்னா : பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் அவர் தங்கி இருந்த அரசு வீட்டை காலி செய்யுமாறு மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது. இந்த மாத இறுதிக்குள் வீட்டை காலி செய்வதாக ஒப்புக் கொண்டு ராகுல் காந்தி பதில் கடிதம் எழுதினார்.
மோடி பெயர் குறித்து அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது பீகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளார்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகவில்லை.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு மற்றொரு நாளில் ராகுல் காந்தி ஆஜராக அனுமதிக்குமாறு அவரது தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மோடி பெயரை குறிப்பிட்டு திருடன் எனக் கூறி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை அவமதித்ததாக கூறி ராகுல் காந்தி மீது சுஷில் மோடி பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி ஜாமீன் பெற்றார். இந்த வழக்கில் சுஷில் மோடி உள்பட 5 பேர் சாட்சியங்களாக விசாரிக்கப்பட்டு உள்ளனர். எம்.பி பதவி நீக்கத்திற்கு பின் முதல் முறையாக பொது வெளியில் தோன்றிய ராகுல் காந்தி அண்மையில் கேரளா மாநிலம் வயநாடு சென்றார்.
இதையும் படிங்க :அடுத்த பிரதமர் யார்? - மவுனம் காக்கும் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், மல்லிகார்ஜூன கார்கே!