டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். இந்த நிலையில், மோடி சமூகத்தினர் குறித்து தவறாகப் பேசியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்து இருந்தது. இதன் அடிப்படையில் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டு கால சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. எம்பி பதவியிலும் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது தகுதி நீக்கத்தை மக்களவைச் செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதி எம்பி பதவியை திரும்பப் பெற்றார்.
ராகுல் காந்தி, கிட்டத்தட்ட 3 மாதம் இடைவெளிக்குப் பிறகு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதியாக சில நாட்களில் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திலும் பங்கேற்றுப் பேசினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 11ஆம் தேதி) நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.