லால்சௌக்கில் தேசியக் கொடி ஏற்றி நடைப்பயணத்தை நிறைவு செய்தார் ராகுல் காந்தி ஸ்ரீநகர்: தொடர் தோல்விகளால் துவண்டுள்ள காங்கிரசை மீண்டும் உயிர்ப்பிக்கும் விதமாகவும், நாட்டில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை "பாரத் ஜடோ" யாத்திரை என்ற ஒற்றுமைப் பயணத்தில் ஈடுபட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த யாத்திரை தொடங்கியது.
இதையடுத்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக இந்த யாத்திரை பயணித்தது. ராகுல்காந்தி தலைமையிலான இந்த யாத்திரையில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் மரியாதை நிமித்தமாக இந்த யாத்திரையில் பங்கேற்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இறுதிகட்டமாக யாத்திரை காஷ்மீருக்குள் நுழைந்தது. காஷ்மீரில் யாத்திரைக்கும் ராகுல்காந்திக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக காங்கிரசார் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், இன்று(ஜன.29) ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக்கில் பாரத் ஜடோ யாத்திரை நிறைவு பெற்றது. அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க கான்டா கர் என்ற இடத்தில், ராகுல்காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து யாத்திரையை நிறைவு செய்தார். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு