ஸ்ரீநகரில் மூவர்ண கொடியேற்றி நடைப்பயணத்தை முடித்த ராகுல் காந்தி ஸ்ரீநகர்:காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மூவர்ண கொடியேற்றத்துடன் தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தை இன்று (ஜனவரி 30) நிறைவு செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா உடனிருந்தனர். இந்த நடைப்பயணத்தின் நிறைவு விழா ஷேர்-இ-காஷ்மீர் மைதானத்தில் நடக்கிறது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய தேசிய ஒற்றுமை நடைப்பயணம் 145 நாட்களை எட்டி இன்று (ஜனவரி 30) ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இந்த நடைப்பயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 4,085 கி.மீ. நடந்தது.
இதனிடையே 12 பொதுக்கூட்டங்கள், 100 மாவட்ட அளவிலான கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புகளில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். இந்த நடைப்பயணத்தில் அவரது தாயாரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.
இந்த பயணம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இறுதி கட்டத்தை எட்டியது. அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோரும் நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். இந்த நடைப்பயணம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:லால்சௌக்கில் தேசியக் கொடி ஏற்றினார் ராகுல் காந்தி