பாகல்கோட்: கர்நாடகாவில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான பசவண்ணாவின் பிறந்தநாள் விழா இன்று(ஏப்.23) கொண்டாடப்படுகிறது. பசவ ஜெயந்தியையொட்டி, கர்நாடக மாநிலம், பாகல்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் பயணமாக கர்நாடகா வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, இன்று பசவரின் நினைவிடத்திற்குச் சென்றார். பசவண்ணா நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்குள்ள சுயம்பு லிங்கத்திற்கு பூஜைகளையும் செய்து வழிபட்டார்.
பிறகு, பசவேஸ்வரரின் நினைவிடத்தில் வழங்கப்பட்ட மதிய உணவையும் சாப்பிட்டார். இதில், ராகுல் காந்தியுடன் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பசவருக்கு மரியாதை செலுத்தினர்.