டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 4) மாலை தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்குத் தயாராகும் வகையில் முன்னேற்பாடுகள், அங்கு நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. மாநில அரசியல் விவகாரம், விவசாயிகள் பிரச்னை குறித்தும் கூட்டத்தில் பேசப்பட உள்ளது.
கடந்த 7 நாட்களில் தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்தும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத புதுக் கூட்டணியை அமைக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக மாநிலக் கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர்களுடனான ராகுல் காந்தியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.