டெல்லி: 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மக்களவைத் தொகுதி, ஒடிசா மாநிலம் ஜர்சுகுடா, உத்தரப்பிரதேச மாநிலம் சன்னாபி, சவுர், மேகாலயா மாநிலம் சோகியோங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி நிறைவடையும். இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்" எனக் கூறினார்.
எனினும், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதம் வரை காலியாக இருந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதம் தான் வயநாடு தொகுதி காலியாகி உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன்படி, ஒரு தொகுதி காலியானால், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வழக்கில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை" எனக் கூறினார்.