தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுப்ரியா சுலேவிடம் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின், ராகுல்! மராட்டிய அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்! - சுப்ரியா சுலேவிடம் முக ஸ்டாலின் செல்போனில் பேச்சு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் பணி மும்முரம் அடைந்து உள்ள நிலையில், அக்கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலேவிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Supriya Sule
Supriya Sule

By

Published : May 4, 2023, 4:36 PM IST

மும்பை :தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலேவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூத்த அரசியல் தலைவரான சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த மே 2ஆம் தேதி அறிவித்தார். அவரது முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் வீதிகளில் இறங்கி கடும்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிர அரசியலில் நிலவும் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களால் மாநிலமே உறைந்து போய் காணப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குழு கூடி கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் என சரத் பவாரும் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் நாளை (ஏப். 5) கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் குழு கூடுகிறது. சரத் பவார் பதவி விலகலைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் பிரஃபுல் பட்டேல், சுப்ரியா சுலே, சஹ்ஹன் புஜ்பால், திலீப் வால்செ பாட்டீல், பவுசியா கான், ஜிதேந்திர அவ்ஹத், அனில் தேஷ்முக், ராஜேஷ் டோப், வித்யா சவான், தனஞ்செய முண்டே, அஜித் பவார் உள்ளிட்டோரிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பிரஃபுல் பட்டேல் மற்றும் சரத் பவாரின் மகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான சுப்ரியா சுலே ஆகியோரிடையே அடுத்த தலைவருக்கான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைவர் போட்டியில் உள்ள சுப்ரியா சுலேவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சுப்ரியா சுலேவை செல்போனில் தொடர்பு கொண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் சுப்ரியா சுலேவைத் தொடர்பு கொண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு மும்பையில் நாளை (ஏப். 5) நடைபெறும் சரத் பவார் தலைமையிலான அக்கட்சியின் உயர் மட்டகுழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த தலைவர் யார் என உறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கமிட்டியில் சரத் பவாரின் மருமகன் அஜித் பவார், மகள் சுப்ரியா சுலே, மூத்த தலைவர்கள் பிரஃபுல் பட்டேல், சாகன் புஜ்பல் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாகப் பதவி விலகல் குறித்து யோசிக்க சரத் பவார் கால அவகாசம் கேட்டு இருப்பதாகவும் இரண்டு நாட்களில் அவரது முடிவை அறிவிப்பார் என்றும் அஜித் பவார் தெரிவித்து இருந்த நிலையில், அக்கட்சி தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்நிலையில், அடுத்த தலைவருக்கான தேர்வு நடைபெறுவது அக்கட்சி தொண்டர்களை மீண்டும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க :ஆ.ராசா - தங்கமணி திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details