டெல்லி:நாடாளுமன்றக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி ரமேஷ் பிதூரியின் வகுப்புவாத கருத்துக்கள் தொடர்பான சர்ச்சையை சுட்டிக்காட்டிப் பேசிய ராகுல் காந்தி, சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பைத் திசை திருப்ப பாஜக பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் பா.ஜ.கவை தோல்வி அடையச் செய்யலாம் எனத் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' என்ற திட்டம் மக்களின் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கத்திற்காகச் செய்யப்படுகிறது. இந்தியாவில் முக்கிய பிரச்சினைகளாக வேலையின்மை, பட்டியலின மக்களின் பிரச்சினைகள், சமத்துவமின்மை, பழங்குடியின மக்களுக்கு ஏற்படும் அநீதி, விலைவாசி உயர்வு உள்ள நிலையில், பா.ஜ.க அரசு மக்களைத் திசை திருப்பு செயல்களைச் செய்து வருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க:புதிய நாடாளுமன்றத்தை ‘மோடி மல்டிபிளக்ஸ்’ என விமர்சித்த காங்கிரஸ் - பாஜக பதிலடி!
ஐந்து மாநிலத் தேர்தல் குறித்த கேள்விக்கு, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என ராகுல் காந்தி கூறினார்.