ஹைதராபாத்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பத்து நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று(மே.30) சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களைக் கையாளும் நிர்வாகியான சாம் பிட்ரோடா வரவேற்றார். எம்பி பதவி பறிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சாதாரண இந்தியராக ராகுல்காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், "சிலர் தங்களை கடவுளுக்கும் மேலானவர்கள் என நம்புகிறார்கள். அவர்கள் கடவுளுடன் அமர்ந்து உடையாடவும், நாட்டு நிலவரம் பற்றி கடவுளுக்கே கூட விளக்கமளிப்பார்கள். நமது பிரதமர் மோடி அவர்களைப் போன்ற ஒருவர்தான். நீங்கள் பிரதமர் மோடியை கடவுளுடன் உட்கார வைத்தால், மோடி பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து கடவுளுக்கு விளக்கம் அளிப்பார். அப்போது தான் என்ன படைத்தேன் என்பது பற்றி கடவுளுக்கே குழப்பம் ஏற்படும்.
பாஜகவினர் விஞ்ஞானிகளுடன் உரையாடி, அறிவியல் குறித்து விஞ்ஞானிகளுக்கே விளக்கம் அளிக்கலாம். அதேபோல் வரலாற்று ஆய்வாளர்களுக்கு வரலாறையும், ராணுவத்தினருக்கு எப்படி போர் புரிவது என்றும் விளக்கம் அளிப்பார்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையில் அவர்களுக்கு எதுவும் தெரியாது" என்று விமர்சித்தார்.