கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியாவின் பாதுகாவலர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "மோடிக்கு நெருக்கமான முதலாளி நண்பர்களை மையப்படுத்திய பட்ஜெட் என்பதன் பொருள்:
கடினமான சூழலில் சீன ராணுவத்தை எதிர்கொண்டு வரும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படாது. இந்தியாவின் பாதுகாவலர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
"மோடிக்கு நெருக்கமான முதலாளி நண்பர்களை மையப்படுத்திய பட்ஜெட் இது. நிதிச்சுமையில் சிக்கி தவிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடையாது. சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு கிடையாது. இந்தியாவின் குறு, சிறு முதலாளிகளுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது" என ராகுல் காந்தி நேற்று விமர்சித்திருந்தார்.