டெல்லி: நாடாளுமன்றத்தின் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசுத்தலைவர் உரைக்கு வணக்கம் செலுத்தும் விவாதத்தில் இன்று (பிப்.2) சுமார் 50 நிமிடங்கள் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அரசை கடுமையாக சாடினார்.
உரையின்போது பல்வேறு விஷயங்களை முன்வைத்த ராகுல் காந்தி, எனது இந்தியாவைப் பற்றி கவலைப்படுவதாகவும் தெரிவித்தார்.
சிறுதொழில்கள் அழிவு
பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பேசுகையில், “இப்போது பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் என இரண்டு வெவ்வேறு இந்தியா உள்ளது. இருவருக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியரசுத் தலைவரின் உரையில் புதிய யோசனைகள் எதுவும் இடம்பெறவில்லை.
அன்று முதல் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என மோடி பேசி வருகிறார். இருப்பினும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு ஒன்றிய அரசு ஆதரவளிக்காததால் பணிகள் சரியாக நடக்கவில்லை.
தற்போது சிறு தொழில்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. சிறுதொழில் முற்றிலுமாக அழிந்துவிட்டதால் 'மேக் இன் இந்தியா' என்பது சாத்தியமற்றது. நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் தற்போது முற்றிலும் அழிந்துவிட்டன.
வேலையில்லாத் திண்டாட்டம்
சில நாட்களுக்கு முன்பு பிகாரில் என்ன நடந்தது என்பது பற்றி குடியரசுத் தலைவர் பேசவில்லை. குடியரசுத்தலைவரின் உரையில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வாக்கியம் கூட இல்லை.
நாளுக்கு நாள் வேலைவாய்ப்பு பிரச்னை அதிகரித்து வருவதால், 2021ஆம் ஆண்டில் மூன்று கோடி இளைஞர்கள் வேலை இழந்திருக்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வேலையில்லாத் திண்டாட்டம் இதுதான்.
எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு என்பதை ஒன்றிய அரசு பேசுவதில்லை. இதைப் பற்றி பேசினால் நாட்டு மக்கள் கிண்டல் செய்கிறார்கள்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் 23 கோடி ஏழைகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் வழங்கப்பட்டன. இப்போது வசதி படைத்தவர்களால் மட்டுமே அதை வாங்க முடிகிறது.