டெல்லி : தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தேர்வு செய்ய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்திற்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் தெலங்கானாவில் ஆட்சியில் இருந்த கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
மாநிலத்தில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி 64 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர்.
பாட்டி விக்ரமர்க மல்லு, உத்தம் குமார் ரெட்டி, ஸ்ரீதர் பாபு, ரேவந்த் ரெட்டி ஆகியோர் முதலமைச்சர் ரேசில் உள்ளனர். முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார். தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாக்ரே உள்ளிட்டோர் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்த டெல்லி விரைந்தனர்.
தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தெலங்கானா முதலமைச்சர் தேர்வு குறித்த உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில், தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தேர்வு செய்ய ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க :கர்நாடக கிடங்கு விபத்து: 6 பேர் பலி... விபத்தி சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என தகவல்!