தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'விவசாயிகளுக்காகப் பேசுங்கள்' - அடக்குமுறைகளுக்கு எதிராக காங்கிரசின் பரப்புரை! - பிரியங்கா காந்தி

டெல்லி : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Rahul Gandhi, Priyanka urge people to join 'Speak Up for Farmers' campaign
விவசாயிகளுக்காக பேசுங்கள் : விவசாயிகள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக காங்கிரஸ் தொடங்கியுள்ள பரப்புரை!

By

Published : Nov 30, 2020, 4:50 PM IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது. கடந்த நவ. 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் ஐந்து நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.

போராட்டம் தொடங்கியபோது, விவசாய போராட்டக் குழுக்களைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் காவல் துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகள் விரட்ட முயன்று அது முடியாமல்போக காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்குக் காவல் துறை அனுமதி அளித்தது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

விவசாயிகளுக்காகப் பேசுங்கள்: விவசாயிகள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக காங்கிரஸ் தொடங்கியுள்ள பரப்புரை!

விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான மத்திய அரசின் அடக்குமுறையை அகில இந்திய காங்கிரசின் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கடுமையாகக் கண்டித்துள்ளனர். அத்துடன், ‘விவசாயிகளுக்காகப் பேசுவோம்’ என்ற பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிந்த ராகுல் காந்தி, "மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்தது. பின்னர் அதனை எதிக்கும் விவசாயிகளைப் படை பலம் கொண்டு அடக்கப் பார்த்தது. லத்தி அடிகளால் சித்ரவதைச் செய்தது.

விவசாயிகள் குரல் எழுப்பும்போது அது நாடு முழுவதும் எதிரொலிக்கும் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். நமது சகோதர விவசாயிகள் சுரண்டப்படுவதற்கு எதிராக கண்டனக் குரல் எழுப்ப ‘விவசாயிகளுக்காகப் பேசுங்கள்' மூலம் எங்களுடன் பரப்புரையில் சேருங்கள்” என வேண்டுகோள்விடுத்துள்ளார்.

பிரியங்கா காந்தி கூறுகையில், "சட்டத்தின் பெயர்தான் வேளாண் பாதுகாப்புச் சட்டம், ஆனால் மத்திய அரசின் பணக்கார நண்பர்களுக்குத்தான் இவற்றின் மூலம் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். விவசாயிகளுடன் பேசாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு எவ்வாறு உருவாக்க முடியும், சட்டங்களை உருவாக்கும்போது விவசாயிகளின் நலன்களை எவ்வாறு புறக்கணிக்க முடியும்? அரசு விவசாயிகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் குரல் எழுப்புவோம்" என்று அறைகூவல்விடுத்துள்ளார்.

போராட்டத்தைக் கைவிட்டால், விவசாய சங்கங்களுடன் டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார். உரையாடலைத் தொடங்குவதற்கு முன் நிபந்தனைகளை விதித்து, மத்திய விவசாய அமைச்சர் அவமரியாதை செய்ததாகக் கூறி மத்திய அரசின் அழைப்பை விவசாயிகள் நிராகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :'போராடும் விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது கொடுமை' - சிவசேனா கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details