டெல்லி :மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனுவை நிராகரித்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.
மோடி பெயர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியும் மேல்முறையீடு செய்ய ஏதுவாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து எம்.பி.க்களுக்கான அரசு குடியிருப்பை விட்டு காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அரசு இல்லத்தை விட்டு ராகுல் காந்தியும் வெளியேறினார்.
மோடி அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மோடி அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தல் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மோடி பெயர் வழக்கில் ராகுல் காந்தி மீது கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கூறி, அடுத்த விசாரணை ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறும் என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதேநேரம் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த மனு மீதான விசாரணையை ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து.
இதனிடையே சூரத் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 7ஆம் தேதி மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், மோடி அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் ரூபாயில் வர்த்தகம்... பிரதமர் மோடி தகவல்!