டெல்லி:மக்களவையில், எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் இன்று (ஆகஸ்ட். 9) நடைபெற்றது. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் உரையாற்றினார். பிரதமர் மோடி குறித்தும் பாஜக ஆட்சி குறித்தும் கடும் விமர்சனங்களை முன் வைத்த ராகுல்காந்தி மீது பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர் பறக்கும் முத்தம் கொடுத்ததாக (flying kiss) சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவையில் ராகுல் காந்தியின் விவாதம் அதற்கான பாஜகவின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பறக்கும் முத்தம் (flying kiss) தொடர்பான விவகாரம் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் மக்கள் பல்வேறு விவாதங்களை முன்வைத்துள்ள நிலையில் சிலர் அதற்கான ஆதாரங்களை குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக பாஜக ராகுல் காந்தியின் பேச்சு மக்கள் மத்தியில் சென்று சேரக்கூடாது என்ற எண்ணத்தோடு முன்கூட்டியே திட்டமிட்டு இதுபோன்ற ஒரு விமர்சனத்தை ராகுல்காந்தி மீது முன் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமா மாலினியிடம் நாடாளுமன்றத்திற்கு வெளியே வைத்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்று ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பியது. இதற்கு அவர், ராகுல் காந்தி அப்படி செய்ததை தான் பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும், மக்களவையில் ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருக்கும்போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது இருக்கையில் அமரும் வீடியோவை சூம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இணையவாசிகள், ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததற்கான எந்த காட்சியும் அதில் காணவில்லையே என்ற வகையில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.