டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு, கடந்த மார்ச் 13அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டு பாஜக தரப்பில் வைக்கப்பட்டு வந்தது. ஆனால், அதானி - ஹிண்டன்பெர்க் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் தனித்தன்மை வாய்ந்த தொழிலதிபர் கவுதம் அதானிக்கும் உள்ள உறவை நாடாளுமன்ற கூட்டுக்குழு கமிட்டி முறையாக விசாரணை நடத்த வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார்.
ஆனால், சமீபத்தில் லண்டனில் பேசிய மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் பற்றி சர்ச்சை கருத்து கூறியதாகவும், எனவே அதற்கு மன்னிப்புக்கேட்க வேண்டும் எனவும் அமைச்சர்கள் உள்பட பாஜக எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். எனவே, மீண்டும் அதானி விவகாரத்தை முன் வைத்த மல்லிகார்ஜூன கார்கே, ‘ராகுல் காந்தி எதற்காகவும் மன்னிப்பு கேட்க மாட்டார். அவர் அந்நிய மண்ணில் எதையும் தவறாகப் பேசவில்லை. மேலும் இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர்கள் சிலர் திரித்துப் பேசுகின்றனர்’ என கூறினார்.
இதனைத் தொடர்ந்து கார்கே மற்றும் இதர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள், மோடியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது நாட்டைப் பற்றி பல்வேறு விதங்களில் அவதூறாகப் பேசி உள்ளார் என குற்றம்சாட்டினர். மேலும் இது தொடர்பாக முதலில் பிரதமர் மோடி மன்னிப்புக்கேட்க வேண்டும் எனவும்;காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதேநேரம் இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் ஆளும் பாஜக அரசானது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்டியல் இடப்பட்டுள்ள விவகாரங்களை குறித்து பேசுவதற்கு அனுமதிக்காமல் அவையை குலைத்து இருப்பது ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கி உள்ளது என கார்கே மேலும் கூறினார்.
இவ்வாறான எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளால், பல சிறு தொழில் நிறுவனங்களில் மத்திய அரசின் பல்வேறு விதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், சிறு சிறு முதலீடுகளைக் கூட ஏமாற்றிய அதானி குழும நிறுவனங்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும்; காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 16) நாடாளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் கூடியது.