டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை (ஜூலை 26) நாடாளுமன்றத்துக்கு டிராக்டரில் சென்றார்.
ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ச்சியாக விவசாயிகள் நாடு முழுக்க போராட்டங்கள் நடத்தினார்கள்.
இந்தச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரிலும் இந்தப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்துக்கு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரில் வந்தார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி! அப்போது அவர், “விவசாயிகளின் குரலாக நான் ஒலிப்பேன். விவசாயிகள் ஒருபோதும் வேளாண் சட்டங்களை விரும்பவில்லை. ஆனால் ஒன்றிய அரசோ, விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையில் ராகுல் காந்தியின் செயலை, 'நாடகம்' என விமர்சித்துள்ள பாஜகவினர் இது 'ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது' என்றும் விமர்சித்துள்ளனர்.
இதையும் படிங்க : ஆகஸ்ட் 15 விவசாயிகள் டிராக்டர் பேரணி!