நியூ யார்க் :பிரதமர் மோடி எதிர்காலத்தைப் பற்றி பேசுவதில்லை என்றும், தனது தோல்விகளுக்கு கடந்த காலங்களில் வேறு யாரையாவது குற்றம் சாட்டுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். ஒடிசா மூன்று ரயில்கள் விபத்து சோகத்தை ஏற்படுத்தியதாக கூறிய ராகுல் காந்தி நாடு சுதந்திரம் பெற்ற பின் நடந்த மோசமான விபத்துகளில் ஒன்று என்று கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். நியூ யார்க் நகரில் உள்ள ஜாவிட்ஸ் மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையற்றினார். ஒடிசா மூன்று ரயில்கள் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக 60 விநாடிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் அவரது பாஜக, வருங்காலத்தை பற்றி ஒருபோதும் பேசுவதில்லை என்றும் தங்களது தோல்விக்கு கடந்த காலங்களில் உள்ள யாரவையாவது குற்றம் சாட்டுவார்கள் என்றும் கூறினார். மூன்று ரயில்கள் விபத்தில் குறைந்தது 280 பேர் உயிரிழந்து இருப்பது ரயில்வேயின் பாதுகாப்பு குறித்து உற்று நோக்க வேண்டிய ஒன்றாக மாறி உள்ளதாக தெரிவித்தார்.
இந்த ரயில்கள் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இதே போன்றதொரு ரயில் விபத்து தன் ஞாபகத்திற்கு வருவதாக கூறிய ராகுல் காந்தி அப்போது ரயில் விபத்துக்குள்ளானது ஆங்கிலேயர்களின் தவறு என்று காங்கிரஸ் கட்சி எழுந்து நிற்கவில்லை என்றார்.