டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகளை வழங்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்டக்குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு முன்னதாகவே, இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அவ்வப்போது கூறப்பட்டு வந்தாலும், இது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தனது ‘X' வலைதளப் பதிவில், “இந்தியா, ஒரு பாரதம். மாநிலங்களின் ஒருங்கிணைப்பு. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சிந்தனையானது நாடு மற்றும் நாட்டின் அனைத்து மாநிலங்களின் மீதான தாக்குதல்” என தெரிவித்து உள்ளார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி, இந்த உயர்மட்டக் குழுவில் இணைய மறுப்பு தெரிவித்து விட்டார்.
மேலும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரும், இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே குழுவில் இடம் பெறாதது குறித்தும் அதிர் ரஞ்சன் செளத்ரி வருத்தம் தெரிவித்து இருந்தார். ஆனால், கார்கேவுக்குப் பதிலாக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் குழுவில் இணைக்கப்பட்டு இருந்தார்.