லே (லடாக்):காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தற்போது லடாக்கிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில், லடாக்கில் உள்ள லே (Leh) நகரத்தில் இருந்து பாங்காங் ஏரி (Pangong lake) வரை ராகுல் காந்தி பைக் ரைடு சென்று உள்ளார். ராகுல் காந்தி தனது பைக் மீதான ஆசையை அவ்வப்போது நிறைவேற்றி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருவார்.
இந்த முறை மேற்கொண்டு உள்ள லடாக் பயணத்தின்போதும் ராகுல் காந்தி இதனை தவற விடவில்லை. தற்போது மேற்கொண்ட ரைடில் கேடிஎம் 390 டியூக் (KTM 390 Duke) பைக்கை ராகுல் காந்தி பயன்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரைடு சென்ற புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவில், “நாங்கள் பாங்காங் ஏரி வழியாக செல்லும்போதெல்லாம் எனது தந்தை ஒன்றை கூறுவார். அது இந்த உலகிலேயே மிக அழகிய இடங்களில் ஒன்று என கூறுவார்” என தெரிவித்து உள்ளார். அது மட்டுமல்லாமல், இந்த பதிவில் லே, லடாக் மற்றும் பாங்காங் ஆகிய ஹேஷ்டேக்குகளை ராகுல் பயன்படுத்தி உள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தி, தான் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது பைக் ரைடு செய்வார். அதிலும், பாரத் ஜோடா யாத்ரா என்னும் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் மேற்கொண்டிருந்தபோதும் பைக் ரைடு செய்து, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார். ஆனால், டியூக் 390 பைக் வைத்துள்ள ராகுல் காந்தியால் பாதுகாப்பு காரணங்களால் டெல்லியில் பைக் ரைடு செய்ய முடியவில்லை.