தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

பிரதமர் மோடி - அதானி தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் புகைப்படங்களை நாடாளுமன்றத்தில் காண்பித்த ராகுல் காந்திக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள உரிமை மீறல் நோட்டீசுக்கு பிப்ரவரி 15க்குள் பதிலளிக்க வேண்டும் என மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!
ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

By

Published : Feb 13, 2023, 9:20 AM IST

டெல்லி:பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வின்போது, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் விவகாரத்தை எழுப்பினார். அது மட்டுமில்லாமல், பிரதமர் நரேந்திர மோடி உடன் அதானி இருக்கும் சில புகைப்படங்களையும் அவர் காண்பித்தார். மேலும் பிரதமர் மோடி - அதானி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார்.

இதற்கு அவையிலும், பல்வேறு பாஜக பிரமுகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “ஆதாரம் இல்லாத, அவதூறான, குற்றம் சாட்டப்பட்ட அறிக்கைகளை விதிகளுக்கு மீறி ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். விதி எண் 353இன் கீழ் மக்களவை சபாநாயகர் மற்றும் பிரதமருக்கு முறையான முன் அறிவிப்பு இல்லாமல் இதனை வெளியிட்டுள்ளார்.

அவையின் கண்ணியம், தவறான, இழிவான, அநாகரீகமான, மக்களவைக்கு விரோதமான மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அறிக்கைகளை ராகுல் காந்தி எம்பி வழங்கி உள்ளார். பிரதமர் மோடி குறித்து வெளியிட்ட தகவல்களுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் உள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்ததில், ராகுல் காந்தி மக்களவையை அவமதித்துள்ளார். இது முழுக்க முழுக்க சபையின் செயல்பாடுகளை மீறுவதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ராகுல் காந்தியின் வாதம் அநாகரீகமாகவும், அவதூறாகவும், ஆதாரமின்றியும் உள்ளதால், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும்” என்றார். இந்த நிலையில் இதுகுறித்து ராகுல் காந்திக்கு, மக்களவை செயலகம் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த நோட்டீசுக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:நாடு முழுவதும் 'அதானி' பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details