அகமதாபாத்: கிரிமினல் அவதூறு வழக்கில், "மோடி குடும்பப்பெயர்" குறித்த கருத்துக்கு தடை விதிக்கக்கோரிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
மனுவை நிராகரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சக், ராகுல் காந்தி ஏற்கனவே இந்தியா முழுவதும் 10 வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார் என்று குறிப்பிட்டு உள்ளார், காங்கிரஸ் தலைவரை குற்றவாளி என்ற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவு "நியாயமானது, சரியானது மற்றும் சட்டபூர்வமானது" என்று தெரிவித்து உள்ளார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரம் 13ஆம் தேதி, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த தேர்தல் பேரணியில், "எல்லா திருடர்களுக்கும் மோடி என்பதை பொதுப்பெயராக வைத்தது எப்படி?" என்று ராகுல் காந்தி பேசி இருந்தார். இதுதொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஜராத் எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்தி மீது, கிரிமினல் அவதூறு வழக்குத் தொடர்ந்து இருந்தார்.
இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 499 மற்றும் 500 (கிரிமினல் அவதூறு) உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ், ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மார்ச் 23ஆம் தேதி, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி இருந்தது.
ராகுலுக்கு பின்னடைவு: 'மோடி குடும்பப்பெயர்' கருத்துக்கு எதிரான அவதூறு வழக்கில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை, குஜராத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) தள்ளுபடி செய்து, செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டு உள்ளது.
தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்று உயர் நீதிமன்றம் தனது உத்தாவில் குறிப்பிட்டு உள்ளது. தண்டனையை நிறுத்தி வைத்து இருக்கும் பட்சத்தில், ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அமர்த்துவதற்கு வழி வகுத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Vijayakumar IPS: யார் இந்த விஜயகுமார் ஐபிஎஸ்? திறம்பட கையாண்ட வழக்குகள்!