மங்களூரு :கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு அரசு பொது பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கபட மாட்டாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்ட மன்றத்திற்கு வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆட்சியை தக்கவைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.
தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து வேட்பாளர்களை ஆதரித்து கட்சி முக்கிய பிரதிநிதிகள் தீவிர அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கர்நாடகவி முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
உடுப்பியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாது என பிரதமர் மோடி கூறியதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி கடுமையாக சாடினார். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தேர்தலுக்கு நான்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், ஐந்தாவது வாக்குறுதியாக பொது போக்குவரத்தில் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கபடமாட்டாது எனக்வ் கூறினார்.