'மக்கள் எழுச்சி திட்டம்' என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பொதுக்கூட்டம், பேரணி நடத்திவருகிறது. நாட்டின் பொருளாதார சூழல், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட சிக்கல்களை முன்னிலைப்படுத்தி அரசுக்கு எதிராக இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் விலைவாசி உயர்வுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தினார்.
இதில் 2014ஆம் ஆண்டு காலத்தை ஒப்பிட்டு சமையல் எரிவாயு, பருப்பு, நெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு குறித்து அரசை விமர்சித்தார். பெரும் பணக்காரர்களின் நலன்களில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் வரப்போகும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை டிசம்பர் 18ஆம் தேதி ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். தனது முன்னாள் தொகுதியான அமேதியில் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக குரல் எழுப்பவுள்ளார். இதில் ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் கலந்துகொள்கிறார்.
இதையும் படிங்க:15 மணி நேர சோதனை... பார் மேக்கப் அறை கண்ணாடிக்குப் பின் ரகசிய பாதாள அறை... 17 பெண்கள் மீட்பு