நாடு முழுவதும் 72ஆவது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக போர் நினைவு சின்னத்தில் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அணிவகுப்பை பார்வையிட வந்த பிரதமர் மோடியை, முப்படை தளபதிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, குதிரைப் படை அணிவகுப்புடன் வருகை தந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு, முப்படை தளபதிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
அதன்பின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து, கடற்படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, டெல்லி காவல் துறை உள்ளிட்டவற்றின் அணிவகுப்பினையும் குடியரசு தலைவர் பார்வையிட்டார். பீரங்கி உள்ளிட்ட ராணுவ வாகனங்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். பின்னர், பல மாநிலங்கள் தங்களது பாரம்பரிய பேரணியை வெகு விமரிசையாக நடத்தின.
முப்படை வீரர்களின் அணிவகுப்பு கரோனா தொற்று அச்சம் காரணமாக, முதல்முறையாக வெளிநாட்டு விருந்தினர்கள் வருகை இல்லாமல் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.