டெல்லி :இந்திய கடற்படையில் கமாண்டராக பணியாற்றிய பிர்னந்து திவாரி உள்பட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள், அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் கத்தார் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு போர் பயிற்சி அளித்து வந்தனர்.
இந்நிலையில், கத்தார் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்கள் 8 பேரையும் கத்தார் பாதுகாப்பு படை கைது செய்தது. ஜாமீன் கேட்டு பலமுறை மனுத் தாக்கல் செய்த போதும், அதை நிராகரித்த கத்தார் நீதிமன்றம் 8 பேரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கடற்படை கமாண்டர் பிர்னந்து திவாரி உள்பட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, 8 பேரின் மரண தண்டனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
தொடர்ந்து 8 பேரின் மரண தண்டனையை எதிர்த்து, கத்தார் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. விரைவில் இந்த மனு மீதான விசாரணை கத்தார் நீதிமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடற்படையில் பல்வேறு பொறுப்புகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கைது செய்யப்பட்ட 8 பேரும் பணியில் இருந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பிர்னந்து திவாரி, சுகுனாகர் பகாலா, அமித் நாக்பால், சஞ்சீவ் குப்தா, நவ்தேஜ் சிங் கில், பீரேந்திர குமார் வெர்மா, சவுரப் வசிஸ்ட், ராகேஷ் கோபகுமார் ஆகியோர் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தகவல் கூறப்பட்டு உள்ளது.
கத்தார் சிறையில் வைக்கப்பட்டு உள்ள 8 பேரை விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு 8 பேரின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க :முன்னாள் கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு! கத்தார் நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு!