டேராடூன்(உத்தரகாண்ட்):உத்தரகாண்ட் மாநிலத்தின் 12ஆவது முதலமைச்சராகப் புஷ்கர் சிங் தாமி இன்று (மார்ச் 23) பிற்பகல் 2.30 மணிக்கு பதவியேற்றார். இவருக்கு ஆளுநர் குர்மீத் சிங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
46 வயதான புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக உத்தரகாண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார். இவருடன் 8 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாஜகவின் முக்கியத்தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அங்கு தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் முதலமைச்சராக பாஜக தலைமையால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.