பஞ்சாப்: பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூஸ்வாலா (28), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சித்து மூஸ்வாலா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், சித்து மூஸ்வாலா பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் இன்று (மே 29) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சித்து தனது நண்பர்களுடன் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது இந்தத் துப்பாக்கி தாக்குதல் நடந்ததாகவும், இதில் சித்து உயிரிழந்த நிலையில், அவரது இரண்டு நண்பர்கள் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப் பெற்றது. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்ட மறுநாளே சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.