தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பதின்டா ராணுவ மைய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாத முகாந்திரமா? அம்ரித் பால் சிங்க்கு தொடர்பா? - Bathinda Military base shot

பதின்டா ராணுவ மைய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அடையாளம் தெரியாத இருவர் மீது பஞ்சாப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் தலைமைறவாக உள்ள அம்ரித் பால் சிங்குக்கு தொடர்பு உள்ளதா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

Punjab Shoot
Punjab Shoot

By

Published : Apr 13, 2023, 11:30 AM IST

பதின்டா :பஞ்சாப், பதின்டா ராணுவ மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாத தாக்குதலுக்கான முகாந்திரம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி அதிகாலை வேளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த நான்கு பேரும் பீரங்கிப் பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சாகர் பன்னே, கமலேஷ், யோகேஷ் குமார், சந்தோஷ் நகரா என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மீதமுள்ள இரண்டு பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், கமலேஷ் எனபவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அடுத்த பெரிய வனவாசி பனங்காடு என்றும் அதே போல் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றொரு வீரரான 19 வயதான யோகேஷ் குமார், தேனி மாவட்டம், தேவாரம் அடுத்த மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல் தெரிய வந்து உள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி சீல் வைக்கப்பட்டு, பஞ்சாப் காவல் துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் இணைந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 28 ரவுண்டுகள் கொண்ட இன்சாஸ் ரக துப்பாக்கி காணாமல் போனதாக ராணுவம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்தின் அருகில் 19 காலி குண்டுகளுடன் கூடிய இன்சாஸ் ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த துப்பாக்கி மற்றும் அதில் இருந்த குண்டுகள் அனைத்தும் தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும், அதன் பின்னர் உண்மை தெரிய வரும் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பயங்கரவாத தாக்குதலா அல்லது ராணுவ வீரர்களுக்குள் நடந்த மோதலா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தீவிரவாத முகாந்திரம் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்தில் வெள்ளை நிற குர்தா - பைஜாமாஸ் அணிந்த இருவர் காணப்பட்டதாகவும் இருவரும் முகத்தை துணியால் மறைத்து இருந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இருவரது கையில் துப்பாக்கி மற்றும் கோடாரி போன்ற கூர்மையான ஆயுதம் காணப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முகாமில் தூங்கிக் கொண்டு இருந்த 4 வீரர்களை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கி கொன்றனரா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் அந்த இருவரும் வனப் பகுதியை நோக்கி தப்பி தலைமறைவானதாக சம்பவத்தை கண்ட மற்றொரு ராணுவ வீரர் சாட்சி தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.

முதலில் வீரர்களுக்கு இடையே நடத்த தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்து இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது தீவிரவாதம் முகாந்திரம் உள்ளதா விசாரித்து வருவதாக போலீசார் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளன.

ராணுவ மேஜர் அஸ்தூஷ் சுக்லா அளித்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது பஞ்சாப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :பதின்டா ராணுவ மையத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - வீரர் பலி!

ABOUT THE AUTHOR

...view details