பெரோஸ்பூர் (பஞ்சாப்):வயல்வெளியில் விளையாடும்போது தற்செயலாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 10 வயது பாகிஸ்தான் சிறுவனை, எல்லை பாதுகாப்புப் படையினர், பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 10 மணியளவில், கோபுரம் எண் 145/07 அருகே பல்லி என்ற சிறுவனை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்தனர். சிறுவன் தனது தாத்தாவுடன் இந்திய பஞ்சாபின் பாகிஸ்தான் எல்லையிலுள்ள வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்யச் சென்றுள்ளார்.
அப்போது வயலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இந்திய எல்லைப் படை அலுவலர்கள், செப்டம்பர் 8ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவ அலுவலர்களை அணுகினர்.
பின்னர், மனிதாபிமான அடிப்படையைக் காரணம் காட்டி காலை 10.55 மணி அளவில் சிறுவன் பாகிஸ்தான் ராணுவ அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த ஆண்டு மட்டும், மொத்தம் 10 பேர் இந்திய எல்லையைத் தாண்டியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பாகிஸ்தான் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.