பெங்களூரு:கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புனித் ராஜ்குமார் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.புனித் ராஜ்குமாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கு நாளை (அக்டோபர் 31) நடைபெறும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, புனித் ராஜ்குமாரின் மகள் த்ரிதி (Dhriti) அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்துள்ளார். அவர் இன்று (அக்டோபர் 30) மாலை பெங்களூருக்கு வருவார். புனித் ராஜ்குமாரின் உடலுக்கு பொதுக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாலை 6 மணிக்கு மேல் புனித் ராஜ்குமாருக்கு இறுதி சடங்குகள் செய்வது கடினம். எனவே புனித்தின் சகோதர்கள், சிவராஜ் குமார், ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அவரது இறுதி சடங்குகளை நாளை (அக்டோபர் 31) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நாளை காலை வரை மக்கள் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என்றார்.
புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை கேட்ட மூன்று ரசிகர்கள் உயிரிழந்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க தலைநகர் பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கதையின் நாயகன்...புனித் ராஜ்குமார் கடந்து வந்த பாதை...