ஸ்ரீநகர்(ஜம்மு - காஷ்மீர்): தெற்கு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் நேற்று (ஜூன் 27) நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காவல் துறை அலுவலர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'நேற்று 11 மணியளவில் துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள், முன்னாள் காவல் துறை அலுவலர் ஃபயஸ் அஹமதுவின் இல்லத்திற்குள் நுழைந்து சுடத்தொடங்கினர். இச்சம்பவத்தில் ஃபயஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவியும் மகளும் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்' என உயர் காவல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, மூவரும் அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஃபயஸ்ஸினை சிகிச்சைக்கு கொண்டு வரும்போதே உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
படுகாயங்களுடன் இருந்த அவரது மனைவியும் மகளும் ஆனந்த் நாக் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக, ஃபயஸின் மனைவி ராஜா பனோ(48), அவரது மகள் ரஃபியா ஜன்(25) இருவரும் ஸ்ரீநகருக்கு அனுப்பப்பட்டனர்.