ஸ்ரீநகர் (புல்வாமா):ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் என்றால், பயங்கரவாதத் தாக்குதல், ராணுவ வீரர்களின் கொலை என்பது தான் நினைவுக்கு வரலாம். துப்பாக்கி முனைகளின் நடுவே பூக்களும் பூக்கத்தான் செய்யும் என்பது போல, ஊதா நிற லாவெண்டர் மலர்களின் சொர்க்கமாக திகழ்கிறது, புல்வாமா. காஷ்மீருக்கே உரிய இயற்கை சூழல், குளிர்ச்சியான கால நிலை, விவசாய நிலங்கள் என அழகியலின் ஆன்மாவை, தன் அகத்தே கொண்டுள்ளது, புல்வாமா மாவட்டம்.
எங்கிருந்து வந்தது லாவெண்டர்?: ஐரோப்பாவில் இருந்து காஷ்மீர் கொண்டுவரப்பட்ட இந்த லாவெண்டர் மலர்கள் இன்று புல்வாமாவின் அடையாளமாக மாறியுள்ளன. மலர்ச்சாகுபடியை ஊக்குவிக்க அம்மாநில அரசும் மானியங்களை வாரி வழங்கி வருகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அம்மாநிலத்தில் லாவெண்டர் மலர்ச் சாகுபடி பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியாருக்குச் சொந்தமான தோட்டங்கள் மட்டுமின்றி, அரசுப் பண்ணைகளும் லாவெண்டர் மலருக்காக பிரத்யேகமாக இயங்கி வருகின்றன.
இங்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வரும் நிலையில், ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கின்றனர். மேலும், CSIR பணியின் கீழ் இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் (IIIM) இந்த பண்ணையை எடுத்து நடத்தி வரும் நிலையில், இங்கு மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் குறித்து ஆராய்ச்சியும் செய்யப்பட்டு வருகிறது.
லாவெண்டர் மலர் சாகுபடி குறித்து பேசியுள்ள பௌரா புல்வாமா கள நிலையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ஷாஹித் ரசூல், இந்த லாவெண்டர் மலர்கள் பூக்க 8 முதல் 12 மாதங்கள் ஆகும் எனக் குறிப்பிட்டார். மேலும், புல்வாமாவின் கிஷ்த்வார் மற்றும் தோடா பகுதிகள் குளிர்ந்த காலநிலை நிலவுவதால் லாவெண்டர் மலர் சாகுபடிக்கு இங்கு சிறந்து விளங்குவதாகவும் அவர் கூறினார்.
அது மட்டுமின்றி ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்து ஜம்மு காஷ்மீரின் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யும் இந்த மலர்களுக்கு எவ்வித இரசாயனங்களும் தெளிக்காமல் வளர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாயிகள் லாபகரம் மிக்க இந்த லாவெண்டர் மலர்ச் சாகுபடியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், முதலீடு இல்லாமல் இவற்றை வளர்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.